தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

X
சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் நாளை மறுநாள்(28-ந் தேதி) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்திற்கு வாழப்பாடி தாலுகா சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும், நாமக்கல் மாவட்டத்திற்கு திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவனத்திலும், தர்மபுரி மாவட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு காவேரிப்பட்டணம் வரட்டம்பட்டி தேசிய மேல்நிலைப்பள்ளியிலும், ஈரோட்டிற்கு சென்னிமலையில் உள்ள எம்.பி.நாச்சிமுத்து, எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியிலும் இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அதன்பிறகு மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும் இரண்டு பிரிவுகளாக கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ.பி.எப். அட்வான்ஸ்கள் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற உள்ளது. எனவே, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்கு உட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கலந்து கொள்ளலாம் என சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் எம்.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
Next Story

