பெயிண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்தவர் மலையரங்காரம் (வயது42). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுகுடி கும்பாபிஷேக பணிகளுக்காக நகைகளை விற்று திருப்பணிகள் நடத்த வேண்டும் என வாட்ஸ்அப் தளத்தில் ஆடியோவாக பதிவு செய்திருந்தார். இதற்கு சிறுகுடி இந்திராநகரை சேர்ந்த முருகன் (41) பெயிண்டர் மலையரங்காரத்திற்கு போன் செய்து கோவில் கும்பாபிஷேக பணிகள் சம்பந்தமாக அனைவரும் சேர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒரு தினத்தை குறிப்பிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் மலையரங்காரம் முருகனுக்கு போன் செய்து கோவில் முன்பு வாடா என்று கூறியுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த முருகனை மலையரங்காரம் உள்ளிட்ட 7 பேர் கொலை மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் அவரை தாக்கியுள்ளனர். மேலும் அவர் மீது சைக்கிளை போட்டு தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முருகன் நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய சிறுகுடியை சேர்ந்த ஆசைஅலங்காரம்(49), மலையரங்காரம் (42), ஆண்டிச்சாமி (46), சின்னச்சாமி, தாஸ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சரவணன், ஆசை அலங்காரம், சிவசாமி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்.
Next Story

