மணப்பாறை அருகே மூதாட்டியை கொன்று 5 பவுன் நகைகள் கொள்ளை

X
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரியகுளத்துப்பட்டியில் வசித்து வந்தவா் சூசைமாணிக்கம் மனைவி குழந்தைதெரசு (65). கணவரை இழந்த இவா் தனியாக வசித்து வந்தாா். இவரது மகன் சவரிமுத்து திருச்சியிலும், மகள் ஜெபமாலைமேரி அருகேயுள்ள முகவனூா் தெற்கு பகுதியிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனா். 100 நாள் பணியாளரான மூதாட்டி வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் உறங்கியுள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை விடியற்காலை மூதாட்டியின் கட்டிலில் இருந்து ரத்தம் வடிந்து இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். கூா்மையான ஆயுதத்தால் கழுத்து அறுத்து மூதாட்டியை கொன்ற மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த சுமாா் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் தனபாலன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம், மணப்பாறை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனா். சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கிடைக்கப் பெற்ற சிசிடிவி காட்சிகளை கொண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், கூடுதல் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Next Story

