மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்தில் அபாயகரமான நச்சு: 5 குழந்தைகள் பாதிப்பு!

X
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்தை உட்கொண்டதன் காரணமாக 5 குழந்தைகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில், மருந்தில் அபாயகரமான டைஎத்திலின் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் அதிக அளவில் கலந்திருப்பது தமிழக அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் செங்கோட்டையன் பேசுகையில், "மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவத்திற்குக் காரணம், இருமல் மருந்தில் 46 சதவீதம் டைஎத்திலின் கிளைக்கால் கலந்திருப்பதுதான். இந்த நச்சுப் பொருள் நரம்பு மண்டலம், சிறுநீரகம், இதயம் போன்றவற்றை விரைவாகத் தாக்கக்கூடியது. இது கிலோ ரூ. 65-க்கு விற்கப்படுவதுடன், பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பெற்றோர் குழந்தைக்கு டானிக் வேண்டும் என வற்புறுத்துவதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு இருமலுக்கு தேன் கொடுத்தாலே போதும். மருந்து விவகாரத்தில் இது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (CDSCO) தோல்வியாகவே கருதப்பட வேண்டும்," என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஐ.எம்.ஏ செயலாளர் கார்த்திக் பிரபு, "இந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மருந்தின் தரத்திற்கு தயாரிப்பு நிறுவனமே பொறுப்பு, மருத்துவர் அல்ல. பொருள் தயாரிப்பிலோ அல்லது விலை நிர்ணயத்திலோ மருத்துவரின் பங்கு இல்லை. தடை செய்யப்பட்ட மருந்தை (கோல்ட்ட்ரிப்) சந்தையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டியது அவசியம். பெற்றோர் டானிக் கொடுக்குமாறு மருத்துவர்களை நிர்பந்திக்கக் கூடாது. மேலும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இருமல் மருந்து குறித்து மருத்துவர்களுக்குத் தனியாகக் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.எம்.ஏ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story

