அதிமுக பிரமுகரை கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்!

அதிமுக பிரமுகரை கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்!
X
அதிமுக பிரமுகரை கடத்தி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் – தூத்துக்குடியில் பரபரப்பு
அ.தி.மு.க., பிரமுகரை கடத்தி சென்று 5 கோடி ரூபாய் கேட்டு சித்ரவதை செய்த கும்பல் அவரை நிர்வாணமாக்கி பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே வாத்தியார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 55. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அ.தி.மு.க.,வில் ஒன்றிய பொறுப்பாளராகவும், தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலராகவும் உள்ளார். கடந்த 7 ம் தேதி பைக்கில் குணசேகரன் துாத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், பழையகாயல் அருகே 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை பைக்கில் ஏற்றி சென்ற குணசேகரன் கோவங்காடு விலக்கில் இறக்கிவிட்டுள்ளார். தொடர்ந்து, துாத்துக்குடியில் வேலையை முடித்து கொண்டு மீளவிட்டான் பகுதிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் ஒன்று திடீரென குணசேகரனை கடத்தி சென்றுள்ளது. அவரது கண்களை கறுப்பு துணியால் கட்டியபடி குரும்பூர் தேரிக்காடு பகுதிக்கு கொண்டு சென்ற கும்பல் அவரிடம் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் உங்களை கொலை செய்ய கூறியதாகவும், 5 கோடி ரூபாய் கொடுத்தால் உயிருடன் விட்டுவிடுவதாகவும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது. தேரிக்காட்டு மண்ணில் கழுத்தளவுக்கு அவரை புதைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். துப்பாக்கியை வைத்தும் மிரட்டி உள்ளனர். ஒரு கோடி ரூபாய் தருவதாக கடத்தல் கும்பலிடம் குணசேகரன் கூறியதை தொடர்ந்து அவரை மண்ணில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். நண்பர்கள் சிலரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு குணசேகரன் பணம் கேட்டுள்ளார். யாரும் கொடுக்க முன்வராததால் ஏமாற்றமடைந்த கடத்தல் கும்பல் அவரை தாக்கியுள்ளது. பின்னர், குணசேகரனை காரில் துாத்துக்குடி மீளவிட்டான் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளனர். பெண் ஒருவரை அவருடன் இருக்க செய்து ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் பணம் கொடுக்காவிட்டால் நிர்வாண வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய கடத்தல் கும்பல் அவரை விடுவித்துள்ளது. அச்சமடைந்த குணசேகரன் கடத்தல் சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் குணசேகரனுடன் மொபைல் போனில் பேசியவர்களின் தகவல்களை திரட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் உள்பட ஐந்து பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அ.தி.மு.க., பிரமுகரை கடத்தி துப்பாக்கி முனையில் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story