கோவை அருகே பிறந்தநாள் கொண்டாட்டம் விபரீதம்: 5 பேர் பலி
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மது போதையில் சென்ற கார் விபத்தில் ஐந்து பேர் பலியாகிய சோகம் கோவையில் ஏற்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ், திருச்சியை சேர்ந்த சபா, தஞ்சையின் பிரபாகரன், அரியலூரின் அகத்தியன் ஆகியோர் பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள தனியார் வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள். நேற்று ஹரீஷின் பிறந்தநாளையொட்டி அனைவரும் மது அருந்திய பின்னர் வாட்டர் வாஷ் செய்ய வந்த டாடா அல்ட்ராஸ் காரை எடுத்துக்கொண்டு சிறுவாணி சாலையில் சென்றனர். காரை பிரகாஷ் ஓட்டி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் பேரூர்–பச்சாபாளையம் சாலையில் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சபா, பிரபாகரன் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மது போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் விபரீதமாகி ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் கோவை முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



