ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 50% மானியத்தில் கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்.
Karur King 24x7 |6 Aug 2024 8:01 AM GMT
ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 50% மானியத்தில் கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்.
ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 50% மானியத்தில் கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம். கரூர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700- பெண்களுக்கு நாட்டின கோழி குஞ்சுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி, ஏழை பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில் ரூபாய் 3200- செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன், 50 சதவீத மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளி முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழி பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கபட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மேற்காணும் தகுதிகளை பெற்று இருப்பின்,தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 23 என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Next Story