மழைநீர் வடிகால் அமைக்க ரூ.50 லட்சம் நிதி- திருச்சி மேயர்
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையிலும், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, கடந்த காலங்களில் மழையின் போது, மாநகராட்சியில் 62, 55, 52 ,8, 26, 24 ஆகிய வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில் 60, 58 ,42 ஆகிய வார்டுகளில் தண்ணீர் தேங்கியது. பின்னர் மோட்டார் மூலம் அந்த தண்ணீர் திருப்பி விடப்பட்டது. மாநகராட்சியில் 421 கிலோமீட்டர் தூரத்துக்கு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரிய காரணத்தினால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு இந்த பாதிப்புகளும் இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் .காலி மனைகளில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க முட்புதர்கள் அகற்றப்பட்டு பள்ளங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு முழுமையாக நிறைவடையும். அப்போது மழையால் ஏற்படும் பாதிப்புகள் இருக்காது. கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஒவ்வொரு வார்டுக்கும் வருகிற ஜனவரி மாதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிக்கால் பணிகளுக்கு டெண்டர் விடப்படும் என்று கூறினார்.
Next Story



