பிரதாபராமபுரம் புனித செபஸ்தியார் ஆலய 50-ம் ஆண்டு பொன்விழா
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் வடக்கு ஊராட்சி பாலத்தடியில் அமைந்துள்ள, திருப்பூண்டி பங்கு ஆலயமான புனித செபஸ்தியார் ஆலய 50-ம் ஆண்டு பொன்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பூண்டி பங்குத்தந்தை எம்.பீட்டர் டேமியன் துரைராஜ் தலைமையில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, புனித செபஸ்தியாரின் திருக்கொடி பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ மக்கள், மலர் தூவி புனித செபஸ்தியாரை வழிபட்டனர். தொடர்ந்து, நடைபெற்ற கண்கவர் வானவேடிக்கை, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பின்னர், சிறப்புத் திருப்பலி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாட்டாமை ஆர்.புஷ்பராஜ், பொருளாளர் சி.சவரிமுத்து செயலாளர் டி.வி.தனபால், அருட்சகோதரிகள், அருட் சகோதரர்கள், மீனவ பஞ்சாயத்தார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



