தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருடிய மூவர் கைது
தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரெஜினா நகரில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி உணவக உரியமையாளர் ஜெயக்குமார் (49), என்பவரது வீட்டில் பட்டப் பகலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் சைபர் க்ரைம் காவல்துறையினர் உதவியோடு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் கோயமுத்தூரில் சொகுசு விடுதியில், தங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியைச் சேர்ந்த ச.சுகுமார் (28), குலைக்கால் தெரு செ.அமர்நாத் (24), மானாமதுரை செக்கடி தெரு பூ.சங்கர் (25) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் ரொக்கத்தை மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் மூவரும் காரில் சென்று பகல் நேரத்தில் பூட்டிய வீட்டினை உடைத்து திருடியதும், இவர்கள் மீது தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆய்வாளர் சந்திரா, உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர்கள் கோதண்டபாணி, திருக்குமரன், அருள்மொழிவர்மன் உள்ளிட்ட காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பாராட்டினார்.
Next Story







