பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தக் கோரி பார்வை மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

X

பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்துவது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும்; வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் இலவசமாக கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். அரசாணை எண் 20-படி அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் கண்டறிந்து சிறப்பு தேர்வு நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்தி படி இரட்டிப்பாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பார்வை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சிங்காரவேலன், துணை ஒருங்கிணைப்பாளர் ப.மனோகரன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து சிங்காரவேலன் கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசுவதற்கு எங்கள் பிரதிநிதிகளை சந்திக்க தமிழக முதல்வர் அனுமதிக்க வேண்டும். இந்த பிரதான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மானியக் கோரிக்கையில் எங்கள் கோரிக்களை நிறைவேற்றாவிடில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் ஆலோசிப்போம் என்றார்.
Next Story