ரோஜ்கார் மேளா - கோவையில் 51 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல் !

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் தலைமையில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் 51 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் தலைமையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. தபால் துறை, வங்கி, ரயில்வே, உள்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்ற 51 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய மத்திய இணை அமைச்சர், “விக்சித் பாரத் நோக்கில் முன்னேறும் இந்த முயற்சியில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 11 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது,” என தெரிவித்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் “தாயின் பெயரில் மரக்கன்று நடுதல்” திட்டத்தின் கீழ் இருவரும் மரக்கன்று நட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நெருக்கடியை சுட்டிக்காட்டி, “மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
Next Story