பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Chennai King 24x7 |18 Jan 2025 10:01 AM GMT
பொங்கல் பண்டிகையொட்டி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், சென்னைக்கு திரும்ப ஏதுவாக 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றி இன்று முதல் பயணத்தை தொடங்குமாறும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களுக்கு ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. அதன்படி கடந்த ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான 4 நாட்களில் சென்னையில் இருந்து தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 7,498 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் பொங்கல் விடுமுறைக்கு மொத்தம் 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து சென்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற பெரும்பாலானோர் நேற்று முன் தினம் முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதை யொட்டி பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் ஜன. 19-ம் தேதி வரை, சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதற்கேற்ப அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்து நேற்று 28,022 பயணிகளும், இன்று 29,056 பயணிகளும் ஊர் திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தம் 42,917 பயணிகள் சென்னை திரும்புவதற்காக நாளை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சென்னை திரும்பும் பயணிகளுக்காக 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 20-ம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை முதல் கிளாம்பாக்கத்தில் அதிக பயணிகள் வரக்கூடும் என்பதால் தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் என மொத்தம் 982 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் என அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகளின் இயக்கங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக 19-ம் தேதி சென்னைக்கு திரும்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றி இன்றுமுதல் பயணத்தை மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Next Story