கோவை: உழவர் சந்தையில் ரூ.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை!

X
மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் கடந்த ஆண்டு ரூ.53 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தையில் மொத்தம் 78 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களான தக்காளி, கத்தரி, பீர்க்கங்காய், அவரைக்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், கோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக குளிர்சாதனக் கிடங்கும் உள்ளது. கடந்த 1.4.2024 முதல் 31.3.2025 வரை இந்த உழவர் சந்தைக்கு 11 ஆயிரத்து 327 டன் காய்கறிகள் வரத்து இருந்தது. இதன் விற்பனை மதிப்பு ரூ.53 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரம் ஆகும். இந்த காலகட்டத்தில் 25 ஆயிரத்து 5 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 51 ஆயிரத்து 316 வாடிக்கையாளர்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர் என இன்று மேட்டுப்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வினோத்குமார், உதவி நிர்வாக அலுவலர் லோகேஷ், மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Next Story

