விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

X

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் 2 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.5 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சாம்பியன்ஸ் ஆப் பியூச்சர்ஸ் அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பைக் பந்தய வீரர் ரெஹான் கான் ரஷீத்-க்கு தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து உலகளவிலான போட்டிகளில் சிறந்து விளங்கும் தடகள வீராங்கனை பி.எம்.தபிதா, பயிற்சிக்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இவர்களுக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர செக் குடியரசில் நடைபெற்ற 7-வது பிராக் செஸ் திருவிழாவில் வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், தனது பெற்றோருடன் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், மாடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவி ஜான்சி ராணி லட்சுமி பாய் `நுஞ்சாகு' உபகரணத்தை ஒரு நிமிடத்தில் 159 முறை சுழற்றி கின்னஸ் உலக சாதனை படைத்தார். அவர் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story