தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,543 வழக்குகளில் ரூ. 19.39 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,543 வழக்குகளில் ரூ. 19.39 கோடிக்கு தீர்வு
X
தேசிய மக்கள் நீதிமன்றம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 543 வழக்குகளில் ரூ.19.39 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான கே.பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். சத்யதாரா, முதன்மை சார்பு நீதிபதி பி.குமார், வழக்குரைஞர் கே. உஷாராணி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி. சுந்தரராஜன், விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் டி. சோழவேந்தன், வழக்குரைஞர் ஆர். திராவிடச்செல்வன் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. போக்சோ வழக்கு நீதிமன்ற நீதிபதி ஜெ.தமிழரசி, சிறப்பு சார்பு நீதிபதி எஸ்.இந்திரா காந்தி, வழக்குரைஞர் ஏ. பாரதி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 5 ஆயிரத்து 543 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 450 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. முன்னதாக, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான டி. பாரதி வரவேற்றார். நிறைவாக, குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ். சுசீலா நன்றி கூறினார்.
Next Story