பட்டுக்கோட்டையில், வெளிமாநிலத்திருந்து சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 564 கிலோ குட்கா பறிமுதல்: குற்றவாளிகள் அதிரடி கைது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தாவின் படி, குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சத்தோப்பு பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, இன்னோவா காரில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பட்டுக்கோட்டை தனிப்படை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான, பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதியைச் சேர்ந்த ராஜா பஹ்ருதீன் (வயது-40), பட்டுக்கோட்டை, லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது-28), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்ங(வயது-29) மற்றும் கர்ணா ராம். (வயது-28) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த ஹான்ஸ்-419 கிலோ, கூல் லிப்-70 கிலோ, விமல் பான் மசாலா-75 கிலோ மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக பட்டுக்கோட்டை உட்கோட்டம், பட்டுக்கோட்டை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் மற்றும் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
Next Story



