தஞ்சாவூர் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகையை திருடியவர் கைது: நகைகள் பறிமுதல்
தஞ்சாவூர் அருகே, பள்ளியக்ரஹாரத்தில் ஆசிரியை வீட்டிலிருந்து 58 பவுன் நகையை திருடிய உறவினரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்து, நகைகளை மீட்டனர். தஞ்சாவூர் அருகே, பள்ளியக்ரஹாரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் சொந்த ஊருக்கு வந்தார். 10-ஆம் தேதி பீரோவில் இருந்த நகைகளை அடகு வைக்க பாலசுப்பிரமணியன் பார்த்தபோது அவை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பாலசுப்பிரமணியன் உறவினர் ஒருவர் அந்த வீட்டுக்கு சில தினங்களாக வந்து போனது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பாலசுப்பிரமணியன் வீட்டின் பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், மோதியம், செயின் என 58 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை அவரை காவல்துறையினர் கைது செய்து, நகைகளை மீட்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியது: பாலசுப்பிரமணியன் வீட்டில் 58 பவுன் நகைகள் காணாமல் போனது தொடர்பாக புகார் வந்ததும், அங்கு சென்று விசாரணை நடத்தினோம். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலசுப்பிரமணியனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ச.சுதாகர் (39) என்பவரை பிடித்து விசாரித்தோம். அவர் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தபோது, நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டார். இந்த நகைகளை திருட முடிவு செய்து, தினமும் வீட்டுக்கு வந்து வளர்மதி வேலைக்கு செல்லும்போது சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு செல்வதை பார்த்துள்ளார். அதன்படி அவர் மார்ச் 31-ஆம் தேதியே வீட்டுக்கு சென்று வளர்மதி வைத்துச் சென்ற சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து நகைகளை எடுத்துவிட்டு, மீண்டும் சாவியை அங்கேயே வைத்துவிட்டார். ஆனால், வளர்மதி நகைகள் இருந்த இடத்தை கவனிக்கவில்லை. ஏப்.10-ஆம் தேதி நகைகளை அடகு வைக்க பார்த்தபோது தான், நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுதாகர் வீட்டுக்கு சென்று வருவது தெரியவந்தது. பின்னர் அவரை காவல் ஆய்வாளர் ம.கலைவாணி, உதவி ஆய்வாளர்கள் தென்னரசு, தேசியன் தலைமையிலான காவல்துறையினர் பிடித்து விசாரித்து, அவரை கைது செய்தனர். திருடிய நகைகளை என்ன செய்வது எனத் தெரியாமல் வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்தார். பின்னர் அந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன" என்றார்.
Next Story




