பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை - தஞ்சாவூர் ஆட்சியர்

பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை - தஞ்சாவூர் ஆட்சியர்
X
ஆட்சித்தலைவர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதில், 597 குழந்தைகளுக்கு தாய், தந்தை இருவரும் இல்லை என்பது தெரிய வந்தது.  மேலும், 12 ஆயிரம் குழந்தைகளுக்கு தந்தையும், 2 ஆயிரத்து 900 குழந்தைகளுக்கு தாயும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக தாயும், தந்தையும் இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு வருவாய்த் துறை அலுவலரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம்.  அக்குழந்தைகள் எந்தக் குடும்பத்தில் இருக்கின்றனரோ, அக்குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அக்குழந்தைகளின் படிப்பு எக்காரணத்தைக் கொண்டும் நிற்காமல், பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு, உயர் கல்விக்கு போக வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் நிறைய பேருக்கு வீடு இல்லை என்பதும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்து அக்குடும்பம் இயங்குகிறது என்பதும் தெரிய வந்தது.  இக்குடும்பங்களுக்கு என்னென்ன அரசு நலத்திட்ட உதவிகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் இலக்கு நிர்ணயித்து சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். மாவட்டத்தில் இடைநிற்றல் தவிர்ப்பதற்காக கல்வித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க உறுதிப்படுத்துகின்றனர். மாவட்டத்தில் நீர் வளத் துறை மூலம் 93 சதவீதமும், வேளாண் பொறியியல் துறை மூலம் 97 சதவீதமும் தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கும்போது, சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளும் விதமாக தயார் நிலையில் வைத்திருக்கிறோம்" என்றார் ஆட்சியர்.
Next Story