மாவட்டத்தில் 599 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை

X
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் திருநங்கைகளுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் அடையாள அட்டை, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் சுய தொழில் தொடங்க மானியம் பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த முகாமை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, மாவட்டத்தில் 599 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 197 பேருக்கு ஓய்வூதியமும், 39 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக நலத்துறையின் மூலம் சுய தொழில் தொடங்க இதுவரை 25 பேருக்கு சுய தொழில் மானியமும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக செல்போன் செயலி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகள் அனைவரும் அடையாள அட்டைகளை பெறுவதன் மூலம் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட மேலாளர் தாட்கோ (பொறுப்பு) வளர்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

