கழிப்பறை கட்டி 6 மாதமாச்சு... திறப்பு விழா காண்பது எப்போது?

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் பிரதான தொழிற்சாலை பகுதியாக ஒரகடம் விளங்கி வருகிறது. இங்குள்ள மேம்பாலத்தின் வழியே வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையும், மேம்பாலம் கீழே ஸ்ரீபெரும்புதூர் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. அதேபோல், ஒரகடம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வாயிலாக ஒரகடம் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒரகடம் பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், ஒரகடம் வரும் பயணியர் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இயற்கை உபாதையை கழிக்க இடமின்றி கடும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, பெண்கள் மற்றும் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவியர் அவதி அடைந்து வந்தனர். மேலும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. இந்த நிலையில், 'பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா' திட்டத்தின் கீழ், 6.43 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரகடம் மேம்பாலம் கீழ் சமுதாய கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டது. கடந்தாண்டு ஜூன் மாதம் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆறு மாதங்கள் கடந்தும், தற்போது வரை கழிப்பறை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு முன்பே, வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மககளின் வரிப்பணமே வீண் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

