குமரி அம்மனுக்கு 6 கோடியில் தங்க சிலை : கேரள பக்தர் வழங்கினார்

X

கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பல்வேறு வெளிநாட்டு பக்தர்கள் இங்கு வரும்போது அவர்கள் வேண்டுகிற விருப்பம் நிறைவேறுவதற்காக நேர்ச்சை செய்வது வழக்கம். அதன்படி கேரளா கொல்லத்தைச் சேர்ந்த ரவிப்பிள்ளை என்பவர் நினைத்த காரியம் நிறைவேறியதால் 6.8 கிலோ எடையுள்ள தங்கத்திலான பகவதி அம்மனின் சிலையை செய்து கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 6 கோடி ரூபாயாகும். இதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதற்காக குடும்பத்துடன் வந்திருந்த ரவி பிள்ளை தங்க விக்ரஹத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணி உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் சிலை அம்மன் மூலஸ்தானன் கருவறை வாசலில் வைத்து மேல்சாந்திகள் பத்மநாபன் போற்றி, ஶ்ரீனிவாசன் போற்றி, விட்டல் போற்றி, நிதின் சங்கர் ஆகியோர் முறைப்படி கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கொலு மண்டபத்தில் கொண்டு வரப்பட்டு நகை சரி பார்ப்பு அதிகாரி செந்தில் குமார், தொழில் நுட்ப உதவியாளர் ராஜா ஆகியோர் சிலையின் எடை மற்றும் அளவுகளை சரிபார்த்து பதிவு செய்தனர். சிலையை வைப்பதற்காக 3 கிலோ எடையில் வெள்ளியிலான ஆமை பீடமும் பக்தர் ரவிப்பிள்ளை காணிக்கையாக வழங்கினார்.
Next Story