முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழையால் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது

X
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட பாசன வசதிக்காகவும் மக்களின் குடிநீர் தேவைக்காகவும் முக்கிய நீராகாரமாக திகழ்ந்து வருகிறது முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கியின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், அதனை ஒட்டிய குமுளி, தேக்கடி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது நேற்று முல்லைப் பெரியாறு அணையில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர், தேக்கடியில் 106 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று காலை நிலவரப்படி அணையில் 73 மில்லி மீட்டர், தேக்கடியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,205 கன அடியில் இருந்து 7,735 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது நேற்று முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 118.10 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் மேலும் 3 அடிக்கும் மேல் உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 121.60 அடியாகியுள்ளது. அணையில் இருந்து தமிழக குடிநீருக்கான நீர் திறப்பு விநாடிக்கு 100 கன அடியாகவும், நீர் இருப்பு 2,945 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் "கிடுகிடு" வென உயர்ந்து வருவது தமிழக விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

