தஞ்சாவூர் மாவட்டத்தில், குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது

X
தஞ்சாவூர் மாவட்டத்தில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு அருகே நடுக்கடை மஜீத் நகரைச் சேர்ந்தவர் எச்.மன்சூர் அலி (36), திருவையாறு பதினைந்து மண்டபத் தெருவைச் சேர்ந்த கே.சுரேஷ்குமார் (48), ஆர்.வெங்கடேசன் (55), செங்கமேடைச் சேர்ந்த ஜி.சுரேஷ் (40) ஆகியோர் 533 கிலோ புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினரால் மே 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதேபோல, பட்டுக்கோட்டை அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிரமேல்குடியைச் சேர்ந்த பி.மாரிமுத்துவை (57) பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும், திருவிடைமருதூரில் 34 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த எஸ். சண்முகபிரபுவை (29) திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும் கைது செய்தனர். இவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஜூன் 23 ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, மன்சூர் அலி, சுரேஷ்குமார், வெங்கடேசன், சுரேஷ், மாரிமுத்து, சண்முகபிரபு ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

