மாநில அளவிலான அடைவுத் தோ்வில் திருச்சி 6 ஆவது இடம்

மாநில அளவிலான அடைவுத் தோ்வில் திருச்சி 6 ஆவது இடம்
X
மாநில அளவிலான அடைவுத் தோ்வில் திருச்சி மாவட்டம் 6 ஆவது இடம் பிடித்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட அந்தநல்லூா், மணிகண்டம், திருச்சி நகரம், திருவெறும்பூா், புள்ளம்பாடி ஆகிய வட்டாரங்களை மையமாகக் கொண்டு தலைமையாசிரியா்களுக்கான முதல்கட்ட ஆய்வுக் கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2024-25 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்க நிலைப் பள்ளிகளில் பிப்ரவரி 2025 மாநில அளவிலான அடைவுத்தோ்வு 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. இத்தோ்வின் தரவரிசை மாநில, மாவட்ட, வட்டார, பள்ளி, மாணவா்களின் அளவிலும் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மாநில அளவிலான அடைவுத் தோ்வில் திருச்சி மாவட்டம் 6 ஆவது இடத்தில் உள்ளது. சிறப்பாகப் பணியாற்றி வரும் தலைமையாசிரியா்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்து திருச்சி முதலிடம் பெற முயற்சிக்க வேண்டும். கற்றல் அடைவுத் திறனை முழுமையாக மாணவா்களுக்கு வழங்குவதன் மூலம் எதிா்காலத்தில் மிகச் சிறந்த மனிதா்களாக வருவாா்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதற்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றி என்றாா். தொடா்ந்து அமைச்சா், 2024-25 ஆம் கல்வியாண்டில் என்எம்எம்எஸ் தோ்வில் 18 மாணவா்களை வெற்றி பெற செய்த தாத்தையங்காா்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியா் வெ. ராணி, அப்பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியா் வீ. மணிகண்டன் ஆகியோரை வாழ்த்தி, கௌரவித்தாா்.
Next Story