சேலத்தில் தனியார் காப்பகத்தில் இருந்த 6 வடமாநில சிறுவர்கள் உள்பட 7 பேர் தப்பி ஓட்டம்

X

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தனியார் நிறுவனங்களில் கூலி வேலைக்கு சிறுவர்கள் அழைத்து வரப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவத்தன்று சேலம் ரெயில்வே போலீசார், ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4-வது பிளாட்பாரத்தில் கேரள எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் வாலிபர் ஒருவர் 15 முதல் 17 வயது வரை உள்ள 6 சிறுவர்களை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் மத்திய பிரதேச மாநிலம், சித்ரகல் மாவட்டம் துத்மானியா பகுதியை சேர்ந்த அகாரியா (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சிறுவர்களை, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு அழைத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அகாரியா மற்றும் சிறுவர்களை அழைத்து செல்ல ரெயில் நிலையத்தில் காத்திருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுந்தர் (45), முத்துகிருஷ்ணன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் சிறுவர்கள் 6 பேரை மீட்டு சேலம் சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுவர்களை சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்த 6 வடமாநில சிறுவர்கள் மற்றும் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுவன் என 7 பேர் நேற்று முன்தினம் இரவு அந்த காப்பகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தனியார் காப்பக ஊழியர் ஞானபிரகாசம் நேற்று அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 7 சிறுவர்களை தேடி வருகின்றனர்.
Next Story