கடன் நிலுவையில்லா சான்று வழங்க மறுப்பு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 60 ஆயிரம் வழங்க உத்தரவு

கடன் நிலுவையில்லா சான்று வழங்க மறுப்பு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 60 ஆயிரம் வழங்க உத்தரவு
X
உத்தரவு
கடன் நிலுவையில்லா சான்று வழங்காததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் தமிழ் வில்லாளன் மனைவி த.மகேஸ்வரி. ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனைக் குழுவில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தமிழ் வில்லாளன் தனியார் நிதி நிறுவனத்தில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மூலம் தவணை முறையில் கைப்பேசியை 2019, அக்டோபர் 31 ஆம் தேதி வாங்கினார். கைப்பேசியின் அசல் தொகை ரூ. 12 ஆயிரத்து 900க்கு மாத தவணைத் தொகையாக ரூ. 1,654 ஐ தமிழ் வில்லாளன் செலுத்தி வந்தார். இந்நிலையில், 2020, ஜூலை 3 ஆம் தேதி ஏற்பட்ட வாகன விபத்தில் தமிழ் வில்லாளன் உயிரிழந்தார். இதையடுத்து, மகேஸ்வரியின் ஒப்புதல் இல்லாமலேயே அவரது வங்கிக் கணக்கிலிருந்து தனியார் நிறுவனத்தினர் கைப்பேசிக்கான மாதத் தவணைத் தொகையைப் பிடித்தம் செய்து வந்தனர். ஆனால், கைப்பேசியின் மொத்த விலை ரூ.12 ஆயிரத்து 900 என உள்ள நிலையில், நிதி நிறுவனத்தினர் 2022, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை ரூ. 16 ஆயிரத்து 517 பிடித்தம் செய்தனர். என்றாலும், நிதி நிறுவனத்தினர் கடன் நிலுவையில்லா சான்று வழங்க மறுப்பதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மகேஸ்வரி 2024, ஆகஸ்ட் 1 ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து, மகேஸ்வரியிடமிருந்து தனியார் நிதி நிறுவனத்தினர் தவணைக்கும் அதிகமான தொகையைக் கைப்பேசிக்காக வசூல் செய்திருப்பதால், அவருக்கு கடன் நிலுவையில்லா சான்று வழங்குமாறும், சேவைக் குறைபாடு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்குமாறும் புதன்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.
Next Story