தொழில் செய்யலாம் எனக்கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக அண்ணன் - தங்கை கைது
சொந்தமாக கட்டிடப் பொருட்கள் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி, திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து ரூ 59 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மோசடி செய்த அண்ணன், தங்கையை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் திருமங்கலக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் வீரப்பிள்ளை (44). சொந்தமாக தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 19.8.23 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் மகன் சிவக்குமார் (49), தஞ்சாவூர் அசோக் நகர் பத்தாவது தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பரமேஸ்வரி (45) ஆகிய இருவரும் அறிமுகம் ஆகி உள்ளனர். சிவகுமார் மற்றும் பரமேஸ்வரி இருவரும் அண்ணன், தங்கை. தொடர்ந்து இவர்கள் இருவரும் வீரப்பிள்ளையிடம் நாம் மூவரும் சேர்ந்து, வீடு கட்டுமான பொருட்கள் தொழில் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக வீரப்பிள்ளையிடம் இருந்து ரூ.59 லட்சத்து 90 ஆயிரத்தை வாங்கி உள்ளனர். ஆனால் கூறியபடி வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை தொழில் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வீரப்பிள்ளை தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சிவக்குமார் மற்றும் பரமேஸ்வரியிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருவரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து வீரப்பிள்ளை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில், ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவக்குமார் மற்றும் பரமேஸ்வரி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story



