தனியார் கழிவுமீன் ஆலைகளை அகற்ற கோரிக்கை : கிராம மக்களின் போராட்டம் 600-வது நாளை எட்டியது

X
Ottapidaram King 24x7 |5 Jan 2026 8:59 AM ISTஓட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி பகுதியில் தனியார் கழிவுமீன் ஆலைகளை அகற்றக்கோரி கிராம மக்களின் போராட்டம் 600-வது நாளை எட்டியது. இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி பொட்டலூரணி தெய்வச்செயல்புரம் பகுதியில் செயல்படும் தனியார் கழிவு மீன் ஆலைகளால் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால், இந்த ஆலைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இந்த மக்களின் போராட்டம் 600-வது நாளை எட்டியது. அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக நடந்த போராட்டத்துக்கு குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். போராட்டக்குழு பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் படிப்பகத்தின் கூடுதல் பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திபிரபாகர், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவைப் பொறுப்பாளர் மணிமாறன், மகளிர் ஆயம் சொரபினா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் மைதீன் கனி, எழுத்தாளர் மு.மு.தீன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிர்நிலவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டக் குழு தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் நன்றி கூறினார். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.
Next Story
