கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
Tiruchengode King 24x7 |10 Aug 2024 12:53 PM GMT
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், பரமத்தி, கபிலர்மலை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,123 பயனாளிகளுக்கு ரூ.39.31 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைவருக்கும் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள நபர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3 தவணையாக தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவர்களுக்கு ரூ.1.00 இலட்சம் வரை வங்கியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாதவகையில் அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக பயனாளிகள் நம் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2001-ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டுவீடுகள், சாய்வுதள வீடுகளை சீரமைக்க ரூ.75,000/- முதல் ரூ.1.00 இலட்சம் வரை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,123 பயனாளிக்கு ரூ.39.31 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். நேற்யை தினம் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 18,651 மாணவியர்கள் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 12,796 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிகளில் காலை உணவுதிட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நாம் அனைவரும் ஒரே சமுதாயம் மனித சமுதாயம் என்பதை உணர்த்திடும் வகையிலும், ஒற்றுமையை பேணி காத்திடும் வகையிலும், வேறுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடும் வகையில் சமத்துவபுரத்தை உருவாக்கி அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களும் ஒன்றாக வாழும் வகையில் ஒற்றுமையை பேணி காத்தவர். அவரது பெயரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதை பெருமைக்குரியதாகும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு பொதுமக்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 237 பயனாளிகளுக்கு ரூ.8.30 கோடி மதிப்பிலும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கு ரூ.2.98 கோடி மதிப்பிலும், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 294 பயனாளிகளுக்கு ரூ.10.29 கோடி மதிப்பிலும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.4.90 கோடி மதிப்பிலும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 142 பயனாளிகளுக்கு ரூ.4.97 கோடி மதிப்பிலும், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.88 கோடி மதிப்பிலும் என மொத்தம் 1,123 பயனாளிக்கு ரூ.39.31 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Next Story