ஏர்வைக்காடு கிராமத்தில் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஏர்வைக்காடு பகுதியில், தற்காலிக இடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில், புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதன் திறப்பு விழா, மேலவாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.தனபாலன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் சோ.பா.மலர்வண்ணன் கலந்து கொண்டு, கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பட்டியல் எழுத்தர் எஸ்.பாரத், உதவியாளர் எம்.ஜெயவேல், திமுக கிளை செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் சுகுமார், கவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், தற்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு பிரதான சாலையிலிருந்து, விவசாயிகள் சிரமமின்றி நெல் மூட்டைகளை கொண்டு வரவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரி மூலம் குடோனுக்கு அனுப்பி வைக்கவும் ஏதுவாக, சாலை மற்றும் தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



