ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் விழா: புடைசூழ ஊர்வலம் வின்னை தொட்ட சிவ சிவா கோஷம்...‌

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் விழா: புடைசூழ ஊர்வலம் வின்னை தொட்ட சிவ சிவா கோஷம்...‌
ராசிபுரத்தில், வல்வில் ஓரியால் கட்டப்பட்ட அறம்வளர்த்த நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு ஆடி மாதத்தில் விழா எடுத்து வருகின்றனர். அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில் இவ்விழாவை கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் 22-ம் ஆண்டாக அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை.31-ல் நடைபெற்ற முதல்நாள் நிகழ்ச்சியில், பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை அபிஷேகத்துடன் விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து துறந்த முனிவர் தொழும் பரவை துணைவர் என்ற தலைப்பில் கோவை மணிவாசகர் அருட்பணி மன்றச் செயலர் சிவ.ப.குமரலிங்கம் சொற்பொழிவு நடைபெற்றது. 2-ம் நாள் நிகழ்வாக ஆக.1-ல் ஸ்ரீவிநாயகர், முருகர், நந்தியெம்பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சன வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. பின்னர் அறம் வளர் நாயகி உடனமர் கைலாசநாதர், 63 நாயன்மார்கள், மூலவர், உற்சவர், திருமேனிகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக அலங்காரம், திருமுறைப்பாராயணம், பேரொளிவழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை ஆளாய அன்பு செய்வோம் என்ற தலைப்பில், குளித்தலை ராமலிங்கம் சுவாமிகள் சொற்பொழிவு நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற 3-ம் நாள் நிகழ்வில் கைலாசநாதர் கோவிலில் இருந்து பன்னிரு திருமுறைகளை அடியார்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்வும், திருவிளக்கு ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் பவானி மா.ஜானகிராமன் பங்கேற்ற சொற்பொழிவு நடந்தது. பின்னர் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு வள்ளி கும்மி நடனம் குழுவினருடன் கைலாய வாத்தியங்கள் முழங்கிட, சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் கோவிலில் இருந்து 63 நாயன்மார்களுடன் சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்கிட அழைத்துவரப்பட்டார். முன்னதாக கோவிலில் திருக்கோடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கைலாசநாதர் நந்தி வாகனத்தில் அறம் வளர்ந்த நாயகியுடன், முருகன், விநாயகர், சனீஸ்வரர், 63 நாயனர்மார்கள் புடைசூழ திருவீதி உலா வந்தார். பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய கடைவீதி, அண்ணா சாலை வழியாக ஊர்வலம் சென்றது. பக்தர்களின் சிவ சிவ கோஷம் வின்னை தொட்டது. அதுமட்டுமின்றி சிவனடியார்கள் நடனமாடி வந்தனர். பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வந்தனர். இதில் சிவனடியார்கள் வானவேடிக்கையுடன்,ஆட்டம் பாட்டத்துடன் ஆடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிவ ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார், சிவஸ்ரீ ஸ்ரீ மது தில்லைநாதசிவம், மற்றும் கைலாசநாதர் சிவனடியார் திருக் கூட்டம் அறக்கட்டளை குழுவினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story