சிறுவனுக்கு பாலியல் தொல்லை: மளிகைக் கடைக்காரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

X
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகைக் கடைக்காரருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டை நேரு நகரைச் சேர்ந்தவர் அபுபக்கர் (53). இவர் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் 2022 ஆம் ஆண்டு கடையில் இருந்தபோது 13 வயது சிறுவன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது அபுபக்கர், கடையில் இருந்த ஒரு பொருளை எடுத்து, கடையையொட்டி உள்ள கிடங்கில் வைக்குமாறு கூறினார். இதன்படி, கிடங்குக்கு பொருளை எடுத்துச் சென்ற சிறுவனிடம் பின்தொடர்ந்து சென்ற அபுபக்கர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து, பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அபுபக்கரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரித்து அபுபக்கருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story

