பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்காக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி மே 7-இல் தேரோட்டம்

X
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாட்கள் கொண்டாடப்படுவதும், 15 ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கம். இதன்படி, இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழாவுக்காக பந்தல் கால் நடும் நிகழ்வு திங்கள்கிழமை காலை நடைபெற்றது. அம்மன் சன்னதி அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் பந்தல் காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு நடப்பட்டது. தொடர்ந்து, மந்திரங்கள் ஓதி தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே. பூர்ண ஜெய ஆனந்த், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கண்காணிப்பாளர் சத்தியராஜ், மேற்பார்வையாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழா மே 10 ஆம் தேதி நிறைவடைகிறது.
Next Story

