பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்த 7 மாத ஆண் குழந்தை

பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்த 7 மாத ஆண் குழந்தை
X
துயரச் சம்பவம்
ஊரணிபுரத்தில் பலூனை விழுங்கியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 7 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), இவரது மனைவி சிவகாமி (30), இவர்களின் 7 மாத ஆண் குழந்தை பிரகதீசன்.   இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென மயங்கிய விழுந்து, வெகுநேரமாகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது.  அப்போது, தாய் குழந்தைக்கு பாலூட்ட முயன்ற போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.   இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த, மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.   இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதவாறு குழந்தை உடலை, ஊருக்கு கொண்டு சென்று, இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர். இருப்பினும் குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், குழந்தையின் இறப்பு குறித்து அறிய, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, குழந்தையின் உடலை செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனர்.   அங்கு, குழந்தையினை உடலை பிரேத பரிசோதனை செய்த போது, குழந்தையின் தொண்டை பகுதியில் பலூன் இருந்தது தெரிய வந்தது. தொண்டையில் சிக்கி இருந்த பலூன் அகற்றப்பட்டது. குழந்தை தவறுதலாக பலூனை விழுங்கியதால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து, பெற்றோரிடம் குழந்தையின் உடலை  ஒப்படைத்தனர்.   இது தொடர்பாக திருவோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலூனை விழுங்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story