பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமிகள் உலக சாதனை படைத்தனர்.

பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமிகள் உலக சாதனை படைத்தனர்.
X
நோபல் உலக சாதனை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பண்ணவயல் சாலையில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 5 வயது முதல் 10 வயதுடைய 7 சிறுவர், சிறுமிகள் ஒரே இடத்தில் இடைவிடாது யோகா, தமிழ் ஓரெழுத்துச் சொற்கள், கணித வாய்ப்பாடு, இயற்பியல் எஸ் ஐ யூனிட்ஸ் என்னும் அனைத்து உலக முறையலகுகள், மழலைப் பாட்டுகள், எழுத்துக்களின் சுருக்கம், மருந்துகளின் பெயர் சொல்வது உள்ளிட்டவைகளை சொல்லியும், எழுதியும் காண்பித்து நோபல் உலக சாதனை படைத்தனர். இதில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கே.வெங்கடேஷ் - ஆஷா தம்பதியினரின் மகள் வெ.ஆ.ஜோஸ்மிதா இவர் 2 நிமிடத்தில் யோகாவில் சூரிய நமஸ்காரம் 19 தடவை விரைவாக செய்து சாதனை படைத்தார். கே.செந்தில்குமார் சுதா- தம்பதியினரின் மகன் எஸ். கிரித்விக் 500 அப்ரிவேஷன் என்னும் சுருக்க குறியீட்டினை 5 நிமிடம் 13 வினாடிகளில் விரைவாகச் சொல்லி சாதனை படைத்தார். மேலும் அவரது சகோதரர் எஸ்.கனிஷ்க்  இயற்பியல் எஸ் ஐ யூனிட் அனைத்துலக முறை அலகுகளில் 100 எண்ணிக்கைகளை 1 நிமிடம் 49 வினாடியில் சொல்லி சாதனை படைத்தார். எஸ்.கார்த்திகேயன்-நித்யா தம்பதியினரின் மகள் கே.கிருஷிதா. இவர் 70ஆங்கில புத்தகங்களின் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியரின் பெயர்களை 1 நிமிடம் 40 வினாடிகளில் சொல்லி சாதனை படைத்தார். எஸ்.முரளி - மீனா தம்பதியினரின் மகள்  எம்.நற்பவி. இவர் 80 மழலைப் பாட்டுகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் 8 நிமிடம் 56 வினாடியில் பாடி சாதனை படைத்தார். ஆர்.சிவகுமார் -சரண்யா தம்பதியினரின் மகன் எஸ்.மித்ரன். இவர் தமிழ் ஓரெழுத்துச் சொற்கள் 70 ஐ 49 வினாடிகளிலும் மற்றும் கணித பெருக்கல் வாய்ப்பாட்டினை 3 நிமிடம் 31 வினாடியில் எழுதியும் 2 சாதனைகள் படைத்தார். எஸ்.விஜயராஜ் -சத்ய பிரியதர்ஷினி தம்பதியினரின் மகள் வி.நைரா இவர் 100 பல்வேறு வகையான நோய்களின் மருந்துகள் மற்றும் எதிர்ப்பு மருந்துகளின் பெயர்களை 59 வினாடியில் சொல்லி சாதனை படைத்தார். இவர்களது சாதனையை நோபல் நிறுவனத்திலிருந்து டாக்டர் எஸ்.மொகமத் சபீர் வந்திருந்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்தார். முன்னதாக, பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ். சண்முகப்பிரியா செந்தில்குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் கே.சி.சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்எல்ஏ என்.ஆர்.ரெங்கராஜன்,   எஸ்.ஆர்.ஜவகர் பாபு, பாஜக மாநில விவசாய அணி துணைத்தலைவர்  ஆர்.இளங்கோ, திரைப்பட இயக்குனர் ஆர்.ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சாதனை படைத்த 7 சிறுவர், சிறுமிகளை பாராட்டிக் கௌரவித்தனர். நோபல் உலக சாதனை படைத்த 7 சிறுவர், சிறுமிகளுக்கு பாராட்டுகள்  குவிந்து வருகிறது.
Next Story