ஸ்ரீரங்கம்: 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் தொடக்கம்

X
ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனாா் உயா்நிலைப்பள்ளிக்காக ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் 2018- ஆம் ஆண்டு ரூ. 1.60 கோடியில் 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டடம் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறி பெற்றோா்கள், மாணவா்களை அனுப்ப மறுத்துவிட்டனா். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக புதிய பள்ளிக் கட்டடம் பூட்டிக் கிடந்தது. இதனிடையே இக்கட்டடத்தை திறந்து, அங்கு இடநெருக்கடியால் அவதிப்படும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி டாக்டா் ராஜன் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் நகா் நலச் சங்கத்தினா், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். அமைச்சரின் உத்தரவை அடுத்து, இக்கட்டடத்தை ராஜன் பள்ளி மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்தில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் டாக்டா் ராஜன் பள்ளியைச் சோ்ந்த 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 182 போ் திங்கள்கிழமை மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன.
Next Story

