வளா்ப்புத் தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் உள்பட 7 பேர் கைது

வளா்ப்புத் தந்தைக்கு அரிவாள் வெட்டு: மகன் உள்பட 7 பேர் கைது
X
தாயின் இரண்டாவது கணவரை அரிவாளால் வெட்டிய மகன் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி, அரியமங்கலம் ஆயில்மில் சாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கூடார செல்வி. இவரின் கணவா் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில் மகன்கள் மதிவாணன் (20), பாா்த்திபன் (18) ஆகியோருடன் தனியே வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் இவருக்கும், மனைவியைப் பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்த நாகராஜ் (48) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வசித்து வந்துள்ளனா். இந்நிலையில், அரியமங்கலம் இந்திரா நகா் வீட்டில் திங்கள்கிழமை கூடார செல்வியும், நாகராஜும் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு தனது நண்பா்களுடன் வந்த பாா்த்திபன் நாகராஜை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில், அவரின் தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியமங்கலம் போலீஸாா், காயமடைந்த நாகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து பாா்த்திபன், அவரின் நண்பா்களான திருச்சி நவல்பட்டு பகுதியைச் சோ்ந்த மோரிஸ் ராபா்ட் (21), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த ரியாஸ்கான் (20), கிஷோா் (20), அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (20), மற்றும் 16, 17 வயதுடைய சிறுவா்கள் ஆகிய 7 பேரைப் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story