முழு சந்திர கிரகணத்தையொட்டி நாளை (செப்.7) தஞ்சாவூர் பெரிய கோயில் நடை மூடல்

X
முழு சந்திர கிரகணத்தையொட்டி செப்.7-இல் (நாளை) தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பொதுவாக சந்திர கிரகணம் அன்று நிகழும் நேரத்துக்கு முன்பாகவே கோயில் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பிறகு பரிகார பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், நாளை (செப்.7-ம் தேதி) முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இன்றைய தினம் இரவு 9.55 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ஆம் தேதி அதிகாலை 1.31 மணி வரை நீடிக்கிறது. இந்நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெற்ற உடன் கோயில் நடை சாத்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. மறுநாள் 8-ஆம் தேதி காலையில் 6 மணிக்கு சந்திர கிரகணம் பரிகாரம் பூஜைகள் செய்த பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

