பேராவூரணி அருகே, கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7,000 கோழிகள் பலி... எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆறுதல்

தீ விபத்து
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி, ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரசிங்கம் மனைவி மகாலட்சுமி (48). விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 300x25, 250x25 என்ற அளவில் இரண்டு கோழிக் கொட்டகை அமைத்து, அதில், 7,000 பிராய்லர் கோழிகளை, இறைச்சி விற்பனைக்காக வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக கோழிப்பண்ணை தீப்பற்றி எரிந்தது. இதில் இரண்டு கொட்டகையும் சாம்பலானது. மேலும், அதில் இருந்த தலா 2 கிலோ என 14 ஆயிரம் டன் எடை கொண்ட 7,000 பிராய்லர் கோழிகளும் தீயில் சிக்கி பலியானது. மேலும், இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 58 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் தீப்பற்றி எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினர். தீயில் எரிந்து கருகிய கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கொட்டகையும், ரூ.18 லட்சம் மதிப்பிலான பிராய்லர் கோழியும் என ரூ.40 லட்சம் பெண் விவசாயி மகாலட்சுமிக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏ ஆறுதல் இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கள்கிழமை மாலை, தீ விபத்தில் நாசமான கோழிப்பண்ணையை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மகாலட்சுமி, வீரசிங்கம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் தனபால் உடனிருந்தார்.
Next Story