வேலப்பாடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றதில் ரூ.71லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள். மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

வேலப்பாடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றதில் ரூ.71லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள். மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
X
ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ரூ.71லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஆரணி வட்டாட்சியர் கௌரி தலைமை தாங்கினார். மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், ஆரணி கோட்டாட்சியர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு பேசியது, மனுநீதி நாள் திட்ட முகாமின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடி தீர்வு வழங்குவது மட்டுமின்றி அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களை நேரடியாக அறிந்து கொள்ள செய்து அதன் மூலம் அவர்களை பயன்பட செய்ய வேண்டும் என்பதாகும். தமிழக முதல்வரின் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பள்ளி கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற காரணத்தினால் தேசிய கல்வி சராசரி சதவீதத்தை விட தமிழ்நாட்டின் கல்வி விகிதமானது அதிக அளவில் உள்ளது. பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை பள்ளி கல்வியிலிருந்து இடைநிற்றல் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கல்வி கற்க வழிவதை செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி குறைந்த வயதில் பள்ளிக்குச் செல்கின்ற மாணவர்கள் இடைநிறுத்தி வேலைக்கு அனுப்புவது தவறாகும். குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே மாணவர்களை நிரந்தர லட்சியத்தை அடைவதற்காக தடையாக இருக்கக் கூடாது என்று பேசினார். மேலும் மாவட்ட நூலக ஆணை குழு சார்பாக நடைபெற்ற இளைஞர் இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், விவாத மேடை, பேச்சு போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செய்யாறு அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 33 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வருவாய் துறை (பொதுப்பிரிவு) சார்பில் ரூ.10லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளும், வருவாய் துறை சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் இயற்கை மரண உதவி நிதி 2 பேருக்கு ரூ.55ஆயிரம், வட்ட வழங்கல் சார்பில் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் 3லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கூட்டுறவு துறை சார்பில் 259 மகளிர் குழுக்களுக்கு 56லட்சத்து 16ஆயிரம் மதிப்பிலான கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முடிவில் வட்டவழங்கல் அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.
Next Story