சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.71 லட்சம் மோசடி

சேலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.71 லட்சம் மோசடி
X
ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் சுவர்ணபுரி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 50). இவர், சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் சுவர்ணபுரி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நான்கு சக்கர வாகனத்திற்கு வங்கியின் மூலமாக கடன் பெற்று தரும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கார்த்தி (32) எனது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.46 லட்சத்திற்கும் மேலாக வேறு ஒருவருக்கு பணப்பரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், எனது நிதி நிறுவனத்தில் பிரபுமணி என்பவர் போலியான ஆவணத்தை கொடுத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த மோசடி எனக்கு தெரியவந்ததை தொடர்ந்து கார்த்தியிடம் கேட்டபோது, அவர் சரியான முறையில் பதில் தெரிவிக்காமல் வேலைக்கு வருவதையும் தவிர்த்து வருகிறார். மொத்தம் ரூ.71 லட்சம் மோசடி செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மோசடி குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா விசாரணை நடத்தி, செவ்வாய்பேட்டையை சேர்ந்த கார்த்தி, பிரபுமணி ஆகிய 2 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story