சேலத்தில் காசநோய் இல்லாத72 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

சேலத்தில் காசநோய் இல்லாத72 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
X
கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்
உலக காசநோய் தினத்தையொட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தினவிழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், கொடையாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் காசநோய் இல்லாத 72 கிராம ஊராட்சிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காசநோய் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பேருக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே காசநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே சளி பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய்க்கான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 50 பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு 4,383 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சேலம் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேவிமீனாள், ஆத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story