ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 7,218 பேர் பயன்

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 7,218 பேர் பயன்
ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தகவல்
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் ரெயில்வே கோட்டத்தில் 8 ஆயிரத்து 763 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 7 ஆயிரத்து 218 பேர் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தின் படி 50 சதவீத ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும்.டிராக்மேன், கீமேன், லோகோ பைலட் ஆகியோருக்கு குறைந்தபட்ச ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். ரெயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும் சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 78 ரெயில் நிலையங்களில் 1,200 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்த பணிகள் 6 மாதத்திற்குள் முடிவடையும். ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது, மீதமுள்ள ரெயில் நிலையங்களில் விரைவில் பொருத்தப்படும், மேலும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ஏற்கனவே பல ரெயில் நிலையங்களில் அந்தந்த ரெயில் நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை சோலார் எந்திரங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோலார் எந்திரங்கள் பொருத்தப்படும். மேலும் ரெயில் நிலையங்களிலோ அல்லது ரெயிலிலோ அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தின் சார்பிலேயே உணவுப்பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும். மீறி ரெயில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உணவுப் பொருட்களை வினியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story