பில்லூரில் 73 ஆம் ஆண்டு கபடி போட்டி

முதல் பரிசை வென்ற பெரியவீட்டுக்காரன் பட்டி செம்மீன் கபடி குழு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி பில்லூரில் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாநில அளவிலான 73ஆம் ஆண்டு தொடர் சிறுவர் கபாடி போட்டி நடந்தது. பில்லூரில் உள்ள அண்ணா விளையாட்டு திடலில் 47 ஏ. கிலோ எடைபிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களை கொண்டு 2 நாள் நடந்த கபாடி போட்டிக்கு முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் பில்லூர் ராகவன் தலைமை வகித்தார். பில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பழனி, ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராணி நாகராஜ், பில்லூர் ஊர் கவுண்டர் கோபாலாகிருஷ்ணன், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் (எ) முருகானந்தம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் இளைஞர் அமைப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 2 நாட்களாக நடைபெற்ற போட்டியில் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற, கரூர் மாவட்டம் பெரியவீட்டுக்காரன்பட்டி செம்மீன் கபாடிக் குழு அணியினரும், கரூர் மாவட்டம் பில்லூர் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் கபாடி அணியும் எதிர் கொண்டு விளையாடினர். பரபரப்பாக ஆடிய இறுதி ஆட்டத்தின் முடிவில் 16 புள்ளிகளை பெற்று கரூர் மாவட்டம் பெரியவீட்டுக்காரன்பட்டி செம்மீன் கபாடிக் குழு அணியினர் முதல் பரிசாக ரூ.5 ஆயிரத்து 24 ரொக்கப்பணம் மற்றும் 5 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை தட்டிச்சென்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் (15) புள்ளிகளை பெற்ற பில்லூர் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் கபாடி குழுவிற்கு 2ஆம் பரிசாக ரூ.4 ஆயிரத்து 24 ரொக்கப்பணம் மற்றும் 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை பெற்றனர். இதேபோல் 3 வது பரிசாக ரூ.3ஆயிரத்து 24 ரொக்கப்பணம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை கரூர் மாவட்டம் பள்ளிப்பட்டி சோலை நற்பனி மன்றம் காபடி ஸ்போர்ட்ஸ் குழுவினர் பெற்றனர். இதேபோல் 4 வது பரிசாக ரூ.3 ஆயிரத்து 24 ரொக்கப்பணம் மற்றும் 2 அடி உயரம் கொண்ட சிறப்பு கோப்பையினை திண்டுக்கல் மாவட்டம் கருவர்பட்டி எ.கே.ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றனர். தொடர்ந்து கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை 5 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த அணிகள், சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கபாடி போட்டியில் நன்கொடையாளர்கள், விழா கமிட்டியாளர்கள், இளைஞர்கள் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கபாடி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story