புத்தூர் ரவுண்டானாவில் 75- க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளோடு காத்திருப்பு
நாகை மாவட்டத்தில், சம்பா அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் ஏறக்குறைய நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ஏற்கனவே, நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்கு அனுப்பப்படாமல் தேக்கம் அடைந்து வருகிறது. கடந்த வாரம் நாகையிலிருந்து வடசென்னை பகுதிக்கு, ரயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், லாரிகள் மூலமும் நெல் மூட்டைகள் அரவைக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், புத்தூர் ரவுண்டானா பகுதியில், சுமார் 75-க்கும் மேற்பட்ட லாரிகள் நெல் மூட்டைகளோடு ஓட்டுனர்கள் கடந்த 5 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். ரயிலில் நெல் மூட்டைகளை ஏற்றும் வரை, நெல் மூட்டைகளோடு லாரிகள் அதே இடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கொள்முதல் நிலையங்களில் மீண்டும் நெல் மூட்டைகள் தேக்கமடையும் அபாயம் உள்ளது. ஆகவே, உடனடியாக ரயில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக, அரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






