தொடர் கோடை மழையால் 750 ஏக்கர் எள் சாகுபடி பாதிப்பு
நாகை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, எள் சாகுபடி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. எள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், எள் பயிர் அழுக தொடங்கி உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையும், மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளனர் . இது குறித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.கமல்ராம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது வேதாரண்யம் வட்டாரத்தில் கரியாப்பட்டினம், வாய்மேடு, மருதூர் பகுதிகளிலும், தலைஞாயிறு சுற்று வட்டார பகுதிகளான திருமாளம், அக்ரஹாரம் , வடுகூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்களிலும் சுமார் 750 ஏக்கர் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ள விவசாயிகள், இந்த பாதிப்பினால் செய்வதறியாது வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வேளாண்மை துறை மூலம் உரிய கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பிடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story




