செந்திக்குமார நாடார் கல்லூரியில் 76வதுபட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 76வதுபட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 598 இளநிலை மற்றும் 251 முதுநிலை மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் கல்லூரிச் செயலாளர் ஜே. மகேஷ் பாபு முறைப்படி பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசு, இஸ்ரோ விண்வெளித் துறை, துணை இயக்குநர் திரு ௧. கிரகதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசும்பொழுது “மாணவர்கள் கல்வி பயிலும் பொழுது நன்றாக அல்லது சுமாராக படித்தல் என்பது பெரிய விஷயம் இல்லை. மாறாக மாணவர்கள் அனைவரும் ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நோக்கி பயணித்தால் நமக்கு வெற்றி நிச்சயம். நான் சாதாரண தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவன். ஆனால் என்னிடம் உயர்ந்த லட்சியம் இருந்ததால் இன்று என்னால் இஸ்ரோவில் பணிபுரிய முடிந்தது. இங்கு பணிபுரிய வரும்பொழுது ஆங்கிலப் புலமை குறைவாக இருந்தது. ஆனால் வளப்படுத்திக் கொண்டேன். அதுபோல் மாணவர்களும் படிப்பு மட்டுமல்லாமல் ஆங்கிலப் புலமையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சி என்பது இந்தக் காலக் கட்டத்தில் தேவையான ஒன்று. அது எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆராய்ச்சி ஒன்றே இன்றையக் காலத்தில் நவீன மயமாக்கலின் மையமாக உள்ளது. அதனால் கல்வி, தொழில்நுட்பம், வணிகம் மட்டுமல்லாமல் மருத்துவத் துறையிலும் கூட புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் களமாக ஆராய்ச்சி உள்ளது. அடுத்ததாக கல்வி என்பது காலந்தோறும் மாறுதலுக்குட்பட்டது. பட்டங்கள் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதிலுள்ள உட்கூறுதல் மாறிக் கொண்டேயிருக்க வேண்டும். அன்றைய காலத்தில் நான் தொழில்நுட்பவியல் பயிலும்பொழுது வேக்குவம் டியூப் ஒரு பெரிய பொருளாக இருந்தது. ஆனால் இன்று அது அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக விஎல்எஸ் சிப்பாக மாறிவிட்டது. ஆகவே வேக்குவம் டியூப் இன்றைய மாணவர்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதனால் கால மாற்றத்திற்கேற்ப கல்வியியலில் புதுமை அவசியமான ஒன்றாகும். பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தினருக்குத் துணை நிற்பதற்கு ஏற்றாற் போல் கல்வியில் மாற்றம் வேண்டும். நெடுங்காலமாக இந்தியா வளரும் நாடு என்று கூறிக்கொண்டேயிருக்கிறோம். அது என்று வளர்ந்த நாடாக மாறுவது? அவ்வாறு மாறுவது மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது. வெகு வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அது மேலும் முன்னேற வேண்டுமென்றால் மாணவர்களாகிய நீங்கள் தாழ்வு மனப்பான்மையை அகற்றி படிக்கும் பாடத்தினை முழுமையாகக் கற்று ஆங்கிலப் புலமையை வளர்த்து ஆராய்ச்சித் துறையில் கவனம் செலுத்தினால் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். மாணவர்களாகிய நீங்கள் இந்தியத் திருநாட்டில் மிக வளமான வாழ்வையும், நலத்தையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்”. என வாழ்த்திப் பேசினார். மாணவ, மாணவியர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அ. சாரதி அவர்கள் பட்டமளிப்பு விழாவினை முறைப்படி முடித்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் த.செல்வசங்கரன் செய்திருந்தார். இவ்விழாவில் கல்லூரி பரிபாலன சபைத் தலைவர் எம். சம்பத்குமார், உபதலைவர்கள் கே. ராமசாமி, எஸ். டெய்சிராணி, கல்லூரிப் பொருளாளர் டி. குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மூனைவர் அ.காளிதாஸ், கல்லூரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மூனைவர் அ. சக்திவேல், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



