முதலீடு அதிக லாபம் கிடைப்பதாக கூறி டாக்டரிடம் ரூ.79 லட்சம் மோசடி .

முதலீடு அதிக லாபம் கிடைப்பதாக கூறி டாக்டரிடம் ரூ.79 லட்சம் மோசடி .
X
சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த 2022-ம் ஆண்டு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணில் இருந்து ‘லிங்க்’ ஒன்று வந்தது. இதை உண்மை என நம்பிய அந்த டாக்டர் அதை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு முதலில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு தவணையாக ரூ.78 லட்சத்து 60 ஆயிரம் வரை முதலீடு செய்தார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள மன்னூர் வளவு பகுதியை சேர்ந்த ஹசீம் (வயது 33) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஹசீமை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் போலி இணையதளம் உருவாக்கி அதன் மூலம் டாக்டரிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story