நுகர்வோர் ஆணைய உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.98 லட்சம் பட்டுவாடா
X
Thanjavur King 24x7 |28 Jan 2025 10:24 PM IST
தீர்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.98 லட்சத்துக்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டது. கும்பகோணத்தைச் சேர்ந்த சேகர் தனியார் நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கும், ரூ.1 லட்சத்துக்கும் என 2 ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தார். இந்நிலையில், அதே ஆண்டில் சேகர் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, சேகரின் வாரிசுதாரர்களான மனைவி மலர்விழி, மகன்கள் சரவணபிரியன், சக்திபிரியன் ஆகியோர் காப்பீடு தொகை கோரி தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தொகையை தர மறுத்ததால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் மலர்விழி, சரவணபிரியன், சக்திபிரியன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் மலர்விழி, சரவணபிரியன், சக்திபிரியனுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.6 லட்சமும், சேவை குறைபாட்டுக்காக ரூ.2 லட்சமும், செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரமும் வழங்குமாறு ஆணையம் 2015 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் நிறுவனத்தினர் மேல் முறையீடு செய்தனர். இதை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க உத்தரவிட்டனர். இதன்படி, பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்களுக்கு ரூ. 7 லட்சத்து 98 ஆயிரத்து 64 க்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
Next Story